Friday 13 December 2013

பராமரிப்பு தனியாருக்கு விட திட்டம் மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கம்


 மேட்டூர் தெர்மல் கன்வேயர் பராமரிப்பு மற்றும் நிலக்கரி கையாளும் பகுதியை தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளதால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் தெர்மலில் (அனல்மின் நிலையம்) ஒரு யூனிட்டில், 210 மெகாவாட் வீதம், நான்கு யூனிட்களில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு, 14,000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது.
மேட்டூர் தெர்மலுக்கு தினமும் சராசரியாக, ஏழு சரக்கு ரயில்களில் நிலக்கரி வருகிறது. நிலக்கரி இறக்கும் பகுதி, நிலக்கரியை மின் உற்பத்திக்காக அனுப்பி வைக்கும் பிரைமரி கிரசர், செகன்ட்ரி கிரசர், லோக்கோ, ஸ்டேக்கர், ரீ கிளைமர், டிப்ளர்கள் உள்ளது.
கிரசரில் இருந்து பாய்லருக்கு நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதி மற்றும் நிலக்கரி கையாளுதல் பகுதியில் ஒரு கண்காணிப்பு பொறியாளர், இரு செயற்பொறியாளர், 80 உதவி மற்றும் இளநிலை பொறியாளர், ஹெல்பர், ஆபரேட்டர் உள்பட, 600 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.தெர்மலின் மொத்த ஊழியர்களில், 40 சதவீதம் பேர் இப்பகுதியில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் தெர்மலில், 2012 மே, 10ம் தேதி நடந்த தீ விபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி கன்வேயர் பெல்ட் எரிந்து சேதமானதால், 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதனால், நிலக்கரி கையாளுதல் மற்றும் கன்வேயர் பராமரிப்பு பணி அனைத்தையும் மொத்தமாக ஒரே தனியார் நிறுவனத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் நடக்க உள்ளது.இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரில் மின்ஊழியர்கள் மத்தியில் நோட்டீஸ் வினியோகம் செய்கிறது. மேலும், கன்வேயர் பராமரிப்பு தனியாருக்கு விடுவது, தெர்மல் மின் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டாக நிரந்தர ஊழியர்கள் வேலை செய்த மேட்டூர் தெர்மலின் பல்வேறு பிரிவுகளில், தற்போது ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில், மேட்டூர் தெர்மலில், 40 சதவீதம் ஊழியர்கள் பணிபுரியும் நிலக்கரி கையாளும் பகுதி, கன்வேயர் பெல்ட் பகுதியை தனியாருக்கு விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்கள் வேறு தெர்மலுக்கு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தால் தெர்மலில் உள்ள, 40 சதவீத பணியிடங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால், மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, தெர்மல் கன்வேயர் பராமரிப்பை தனியாருக்கு விடும் முடிவை மின்கழகம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.