Tuesday 8 April 2014

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை

பகுதி 1
முன்னுரை
இந்திய நாட்டு மக்கள் 16வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்ற நிலையில் தான் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் நிலவும் பெரும் பணநாயகத்தின் வலிமையானது தொடர்ந்து ஜனநாயகத்தின் வலுவை சீர்குலைத்து வருகிறது. பொதுவாழ்விலும் அரசின் உயர்மட்டத்திலும் புரையோடிப் போயுள்ள கட்டுக்கடங்காத ஊழலானது ஜனநாயக அமைப்பின் உயிர்நிலைகளை சீழ்பிடிக்கச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பின்பற்றி வந்த புதிய தாராளவாதக் கொள்கைகள் நாடாளுமன்றத்தைத் தரமிழக்கச் செய்துள்ளதோடு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், இவற்றிற்கு அடிபணிந்து நடக்கும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணியின் முடிவுகளுக்கு இணங்கவே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படும் நிலைக்கும் அது தள்ளப்பட்டுள்ளது.

Sunday 6 April 2014

மின்வாரியத்தில் பணியிட மாற்றம் தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் புகார்

திருவாரூர், ஏப். 5 -
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருவாரூர் மின் திட்டக் கிளையில் பணியாற்றி வந்த கணக்கீட்டாளர்கள் இருவர், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ம் தேதி பணியமர்த்தப்பட்ட ஒரு கைம்பெண்ணையும், அதே போல வேறொரு ஊழியரையும் 3.4.2014 அன்று துறையின் தேவை கருதி பணியிட மாற்றம் (டெப்டேஷன்) செய்துள்ளதாக மின்வாரிய நிர்வாகம் கூறுகிறது. இது போன்ற உத்தரவுகளை மேற்பார்வையாளர்தான் செய்ய வேண்டும். ஆனால் இயக்கம் மற்றும் பராமரிப்புத்துறையின் செயற்பொறியாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோன்று ஒரு ஊழியருக்கு ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கோரிக்கை வைத்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவ்வாறு செய்ய முடியாது என இதே நிர்வாகம்தான் தெரிவித்துள்ளது.
முன்னுக்குப் பின் முரணாக தமிழ்நாடு மின்சாரவாரிய திருவாரூர் மின்திட்டக்கிளையின் செயற்பொறியாளர் செயல்படுவதாக மின் ஊழியர் அமைப்பின் தலைவர்கள் குறைகூறுகின்றனர்.இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்ட போது நிர்வாகத்தின் வசதிக்காக தற்காலிகமாகத்தான் இந்த டெப்டேஷனை செய்துள்ளோம் என்று கூறினார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகாதா? என்று கேட்டபோது அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த சிபிஎம் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.நடராசனின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார். அவர் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.
எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த போக்கு சரியானதல்ல என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

மஸ்தூர் பணியாளர்களுக்கு பதவிஉயர்வு வழங்க மறுக்கும் தலைமைபொறியாளர் கோவை மண்டலம் அவர்களின் நடவடிக்கையை கண்டித்தும் மஸ்தூர் பணியாளர்களுக்கு பதவிஉயர்வு வழங்கிட கோரி மாபெரும் கூட்டு முறையீட்டு போராட்டம்



இ.பி.எப்., கணக்கில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுப்பு

துடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.,) சந்தா தொகையில், உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்துடன், சலுகைப் படியை சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் இருந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்கு கடிதம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், இதர சலுகைப்படிகளையும் சேர்த்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில், வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்தால், நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். அதே சமயம், ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில், சேமிப்பு அதிகரிக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆசிரியர், அரசு ஊழியர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தீக்கதிர் செய்தி

நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில், அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து தனியாக தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்திருப்பது இது முதல் முறையாகும் அரசுஊழியர் ஆசிரியர்களின் முதன்மையான கோரிக்கை புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து , ஏற்கெனவே அமலில் உள்ள வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும். 
பாரதிய ஜனதா தலைமையில் இருந்த மத்திய அரசு இந்ததிட்டத்தை, 2001-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியபோதே, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பதற்கிணங்க அன்றுதமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அண்ணா திமுக அரசு, 01-04-2003 முதல் அமல்படுத்தியது. அது மட்டு மல்லாமல் அரசுஊழியர்களின் ஓய்வூதிய கால உரிமைகள் மீது கையை வைத்தது. இதற்கெதிராக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கிளர்ந் தெழுந்து போராடியது வரலாற்று நிகழ்வாகும். அந்த நேரத்தில் 1,70,000 அரசுஊழியர்களை அண்ணா திமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. பணியில் சேர்க்க மறுத்தது.

Saturday 5 April 2014

இரண்டாவது சனி விடுமுறையில் முரண்பாடு: மின்கழகத்தில் நீடிக்கும் வினோத நடைமுறை

தமிழக மின்கழகத்தில், இரண்டாவது சனிக்கிழமை குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே விடுப்பு, இதர ஊழியர்களுக்கு பணி என்ற வினோத நடைமுறை, 25 ஆண்டுக்கு மேலாக நீடிப்பது, ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மின்வாரியத்தின், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்செலுத்துகை கழகத்தில் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், கணக்கீட்டாளர், எழுத்தர் உட்பட, 80ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர். இதில், வினியோக வட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. மின் உற்பத்தி பிரிவுகளில் பணிபுரியும் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. இந்த முரண்பாடு, 25 ஆண்டுக்கு மேலாக மின்வாரியத்தில் நீடிப்பது ஊழியர்களை குழப்பத்திலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.