Friday 30 May 2014

தமிழகத்தில் ஜூன் முதல் தேதியிலிருந்து மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் தேவைதொலை நோக்குத்திட்டம்

தமிழகத்தில் ஜூன் முதல் தேதியிலிருந்து மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஓரளவு விவசாயிகள், சிறு குறு தொழில் உரிமையாளர்கள், பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் அறிவிப்பாக இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பின் ஆயுள் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. காரணம் ஜூன் மாதத்திலிருந்து காற்றாலை களின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த காற்றாலைகள் முழுவதும் தனியார் கைகளில் இருந்து வருகிறது. இவர்களிடம் வாங்கியே மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். சரி காற்று இல்லாத காலங்களில் யாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது என்ற கேள்வி எழுகிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் தெரிந்தே மின் வயரில் கை வைப்பது போல், அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்கும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது தமிழக மின் வினியோக நிறுவனத்தின் மின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.30 என்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 8.52 முதல் 13.89 என்ற அளவிற்கு 6 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் தனியாருக்கு மின்சாரம் வாங்கிய வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் மின் வினியோக நிறுவனம் தன்னுடைய வருவாயில் 70 சதவிகிதத்தை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப் பயன்படுத்தியுள்ளது.
அதுவும் அரசுக்கு தனியாரின் மின்சாரம் தேவையில்லை என்ற நிலையிருந்தாலும், குறிப்பிட்ட அளவிற்கான மின்சாரத்திற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியே ஆக வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு சரத்து ஆகும்.அதுவும் தமிழகத்தில் 2011ம் ஆண்டு நிலவரப்படி மின் தேவை என்பது 12 ஆயிரம் மெகாவாட். அப்போது பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வருடத்திற்கு மின் தேவை என்பது 8 முதல் 10 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம் மக்கள் தொகை பெருக்கம், புதிய தொழில்கள், புதிய வீடுகளுக்கான மின் இணைப்பு என்ற பல்வேறு வகையில் தேவை அதிகரித்து வருகிறது. இதனை ஈடுகட்ட எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
ஏற்கனவே மின் உற்பத்தியில் இருந்து வரும் எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டத்துடன் தமிழக அரசும், மின்வாரியமும் மின் உற்பத்தி திட்டங்களை வகுத்திட வேண்டும். தேவையான நிதியினை ஒதுக்கி மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
THANKS To.theekkathir


Wednesday 21 May 2014

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் மறைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும், இந்திய இடதுசாரி இயக்கத்தின் இணையற்ற தலைவர்களில் ஒருவருமான தோழர்.
ஆர்.உமாநாத் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு தோழர் ஆர்.உமாநாத் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 21.5.2014 (புதன்) காலை 7.15 மணிக்கு இயற்கை எய்தினார்.