Wednesday 23 July 2014

மின்வாரிய முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, ஜூலை 22 -தமிழ்நாடு மின்வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்விபத்தை தடுக்கும் வகையில் தரமான மின் உபகரணங்களை- போதிய அளவில் வழங்க வேண்டும்; தொழிலாளர்களின் பணியிட மாறுதலில் வாரிய நடைமுறையைப் பின்பற்றவேண்டும்; தொழிலாளர் களை மிரட்டி வேலை வாங்கும் சர்வாதிகாரப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும்; மஸ்தூர் தொழிலாளர்களை கள உதவியாளர்களாகப் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் வி.அரசுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், திட்டச் செயலாளர் கு.செல்வராஜ், பொருளாளர் பி.ஆவுடைமுத்து மற்றும் கோட்ட நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், கே.கருப்பையா, எம்.கலியபெருமாள், வி.முத்து, ஆர்.பன்னீர்செல்வம், சி.சின்னத்தம்பி, டி.கணபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Friday 11 July 2014

மின்வாரியம் : கணக்கீட்டு அதிகாரிகளிடம் பாரபட்சம் எஸ்.எஸ். சுப்பிரமணியன் - தீக்கதிர்

மின்வாரியத்தில் செயல்படும் மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக மட்டும் அல்லாமல் அதிகாரிகளின் அவல நிலைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் வாரியத்தில் பணியாற்றும் பொறிஞர்களை ஸ்தாபனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.இவைகளின் பின்னணியில் மின்வாரிய கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரிகின்ற உதவி கணக்கீட்டு அதிகாரிகள் தாங்கள் அதிகாரிகளாக பயன்படுத்தப்படவில்லை என்ற கவலையோடு மின் ஊழியர் மத்திய அமைப்பை நாடி உள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் வாரியத்தில் பணியாற்றும் உதவி கணக்கீட்டு அதிகாரிகளை அழைப்பது, குறைகளை பகிர்ந்து கொள்வது, நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பது என்ற அடிப்படையில் 6.7.2014 அன்று உதவி கணக்கீட்டு அதிகாரிகளின் கூட்டத்தை மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி குறைகளையும், கோரிக்கைகளையும் அடையாளங்கண்டு வரிசைப்படுத்தி உள்ளது. 21 மின் வட்டங்களிலிருந்து 45 உதவி கணக்கீட்டு அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மின் எரிப்பு கணக்கீடு, வாரியத்தின் வருவாயை உத்தரவாதப்படுத்தி உயர்த்துவது என்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கும் எங்களை பச்சை மையை பயன்படுத்தி கையெழுத்திடலாம் என்ற உரிமையை தந்து, எழுது பொருளை விநியோகம் செய்யும் அலுவலக உதவியாளரைப் போல பயன்படுத்துவதாக கண்ணீர் மல்க தங்களது குறைகளை முன் வைத்து, வாரியம் எங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு போன்றவைகளை பரிசீலிப்பது போன்றது ஒரு புறமானாலும், கணக்கீட்டுப் பணியின் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஒழுகுகின்ற வருவாயை தடுத்தாலே மின் வாரியத்தின் வருவாய் சிறிது கூடுதலாவதற்கு உதவும் என்ற ஆலோசனையை முன் வைத்தனர்.